Published : 13 Dec 2022 06:58 PM
Last Updated : 13 Dec 2022 06:58 PM
சென்னை: செங்கல்பட்டு புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற முதல் திருநங்கைக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வழங்கினார்.
வழக்கறிஞர் கண்மணி: சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு கடைசி மகனாக கடந்த 2000-ம் ஆண்டு பிறந்தவர் கண்மணி. இத்தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். பள்ளிப்படிப்பை முடிக்கும் சூழலில், பாலின மாறுபாடு அடைந்துவந்த தங்களது மகனை ஏற்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதையடுத்து 2017-ம் ஆண்டு 12-ம் வகுப்பை முடித்துவுடன் வீட்டிலிருந்து வெளியேறினார் கண்மணி. பின்னர், விடுதியில் தங்கி செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்பை முடித்தார். இதன்மூலம் அந்த சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.
கண்மணியை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்தாலும் பள்ளி கல்லூரியில் சக மாணவர்களும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும் கல்வி கற்க துணை புரிந்ததாக கண்மணி கூறியுள்ளார். மேலும், வழக்கறிஞரான பின்னர் அதோடு நிறுத்தி விடாமல் சிவில் நீதிபதிக்கான தேர்வில் பங்கேற்று வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கில் வேளச்சேரியில் உள்ள சந்துரு லா அகாடமியில் பயிற்சி பெற்று வருவதாகவும், கண்மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கண்மணிக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகிவற்றை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற வளக்கத்தில் உள்ள பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் கவுரி ரமேசும் உடனிருந்து, பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமல்ராஜ், "ஒவ்வொரு ஆண்டும் சட்டம் படித்து வழக்கறிஞராக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆண்களுக்கு நிகராக பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பிற மாநிலங்களில் படித்து தமிழ்நாடு கவுன்சிலில் பதிவு செய்ய வரும் வழக்கறிஞர்களின் ஆவணங்கள் முறையாக ஆராய்ந்து பிறகே, பதிவு செய்யப்படுகிறது” எனறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT