

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் ஜன.3-ம் தேதி திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்திலும், விருதுநகரிலும் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் எனத் தொடர்ந்து மத்திய அரசு கூறிவருகிறது. அவர்கள் உண்மையிலேயே நடத்துவதாக இருந்தால், நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றி இருக்கலாம். இதைச் செய்யாததால், ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகமே. ஜன.3-ம் தேதி அலங்காநல்லூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்பர்.
தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது குறித்த முழுத் தகவல் கிடைக்காத நிலையில், கருத்து கூற முடியாது. மத்திய அரசு தமிழக அரசை நிர்ப்பந்தப்படுத்தி மக்கள் விரோத திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றால் கடுமையாக எதிர்ப்போம்.
கட்சி வளர்ச்சிப் பணியில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தனிநபர் குறித்து விமர்சனத்துக்கு பதில் அளித்து பிரச்சினையை திசை திருப்ப நான் விரும்பவில்லை. எனது மகன் பிரச்சினையை தீர்க்கவே காவல் நிலையம் சென்றார். சாதாரண இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்காமல், எனது மகன் என்பதால் ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டது தேவை யில்லாதது.
மீனவர் நலனில் மத்திய அரசு அக்கறையில்லாமல் உள்ளது. இலங்கை கடலோரத்தில் தமிழக மீனவர்களின் 110 விசைப் படகுகள் மீட்கப்படாமல் உள்ளன. அவற்றை உடனடியாக மீட்டு கொண்டுவர வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலை உள்ளது. எனவே, மத்திய அரசு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை வெற்றிபெறவில்லை. ஏடிஎம்களில் இன்னும் மக்கள் கூட்டம் குறையவில்லை. வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பலர் இறந்துவிட்டனர். மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தடையின்றி பணம் கிடைக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.