

சென்னை: முல்லை பெரியாறு அணை தொடர்பாக சென்னையில் தமிழக, கேரள தலைமைச் செயலர்கள், இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழகம் - கேரளா இடையே முல்லை பெரியாறு அணை தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. சமீபத்தில் கேரள சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில ஆளுநர் ஆரிப்கான், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என்று அறிவித்தார். இதற்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது என அம்மாநில அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து, புதிய அணை கட்டுவதில் கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு, ‘அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் முல்லை பெரியாறில் பராமரிப்பு பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் மேற்கொள்ள, மாற்றியமைக்கப்பட்ட அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும். நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காகவும், முல்லை பெரியாறு பிரதான அணையில் சிமென்ட் கலவை பூசுவதற்கும், அணையில் இடது பகுதி உபரி நீர் மதகை சரிசெய்வதற்கும், நிலநடுக்கங்களை கண்டறியும் ‘செஸ்மிக்’ உபகரணத்தை அமைக்கவும் மற்றும் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளது.
இந்த சூழலில், சென்னையில் தமிழக, கேரள தலைமைச் செயலர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். நுங்கம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, முதல்வரின் செயலர் த.உதயச்சந்திரன், கேரள தலைமைச் செயலர் ஜாய் மற்றும் இரு மாநில நீர்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், முல்லை பெரியாறு விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.