

ராஜபாளையம்: நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06004) நேற்று முன்தினம் இரவு 7.20 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு தென்காசி வழியாக ராஜபாளையம் வந்து கொண்டிருந்தது.
இரவு 10.05 மணி அளவில் ராமலிங்காபுரம் ரயில்வே கேட்டை கடந்து நல்லமநாயக்கன்பட்டி அருகே வந்தபோது மின் கம்பி, ரயில் சக்கரத்தில் சிக்கி பயங்கர சத்தம் கேட்டது. லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். அதற்குள் மின் கம்பி ரயில் பெட்டியை சுற்றியது.
தகவலறிந்த ரயில்வே போலீஸார் மற்றும் ஊழியர்கள் வந்து ரயில் பெட்டியில் சிக்கிய மின் கம்பியை அகற்றினர். பின்னர் இரவு 11.50 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
மின்வழித்தடம் அமைக்கும் பணியின்போது, கம்பிகளை சரியாக சுற்றி வைக்காமல் சென்றதும், கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த கம்பி காற்றின் வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சுற்றிக் கொண்டது தெரியவந்தது.