Published : 13 Dec 2022 06:55 AM
Last Updated : 13 Dec 2022 06:55 AM
கோவை: கோவையில் பசு மாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினையுற்றிருந்த பசுவுக்கு சிவனடியார்கள் வளைகாப்பு நடத்தினர். இந்துக்கள் கோமாதா என வழிபடும் பசுவின் சிறப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் கோவை இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் கோயிலில் பசுவுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
சிவனடியார் இருகூர் நாகராஜனின் 3 வயதுடைய காரிப்பசு, முதல் முறையாக சினையுற்றதைத் தொடர்ந்து, அப்பசுவுக்கு பட்டாடை அணிவித்து, கழுத்து, கொம்புகளில் மலர் மாலை, வளையல் அணிவித்து பூஜை செய்யப்பட்டது.
பின்னர், பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட9 வகை உணவுகள் பசு மாட்டுக்குஊட்டப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பசுவை பயபக்தியுடன் தொட்டு வழிபட்டனர். முன்னதாக தேவார- திருவாசக, கைலாய வாத்ய இசையுடன் நடராஜர், சிவகாமசுந்தரி, அங்காளம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பிரசாதத்துடன் வளையல், உடை, தாலிச்சரடு உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன. இதில் கோவை ஆனந்த வேதாஸ்ரமத்தின் நிறுவனர் பிரம்ம ரிஷி ஈஸ்வரன் குருஜி மற்றும் உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லிராஜ், கிழக்குப் பகுதிஒருங்கிணைப்பாளர் இருகூர்நாகராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் ஆ.வெ.மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிவனடியார்கள் கூறும்போது, “பசுவின் ஒவ்வொரு உடல்பாகமும் ஒவ்வொரு தெய்வத்தைகுறிக்கிறது. தலை சிவபெருமானையும், நெற்றி சக்தியையும், வலது கொம்பு கங்கை நதியையும், இடது கொம்பு யமுனை நதியையும் குறிக்கின்றன. பசுக்கள் இருக்கும் இடத்தில் அருள், பொருள், செல்வம் முழுமையாய் இருக்கும் என்பது ஐதீகம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT