

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கித் தவித்த 7 பேர் பெரும் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மதுராந்தகம் அருகே உள்ள பூதூர் கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள்(65) பாலாற்று பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். தண்ணீர் குறைவாக இருந்ததால் ஒரு கரையில் இருந்து மறு கரைக்குச் நடந்து சென்றார். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆற்றைக் கடக்க முடியாமல் ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் சிக்கினார். மணல் திட்டுக்கு இருபுறமும் தண்ணீர் அதிகரித்து.
அப்பகுதியைச் சேர்ந்த திலீப்குமார்(26), விக்னேஸ்குமார்(26), மதன்குமார்(24), சிலம்பு(25) உள்ளிட்ட 6 இளைஞர்கள் அவரை மீட்க தண்ணீருக்குள் இறங்கினர். அவர்களும் கரைக்கு திரும்ப முடியாமல் மணல் திட்டில் சிக்கினர்.
ஆற்றில் தண்ணீர் அதிகரித்ததால் அப்பகுதி மக்கள் மதுராந்தகம், அச்சரப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். வெள்ளம் அதிகளவில் சென்றதால் தீயணைப்புத் துறையினராலும் அவர்களை மீட்கமுடியவில்லை.
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, பெரும் போராட்டத்துக்குப் பிறகு 7 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் வட்டாட்சியர் கற்பகம், மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன் ஆகியோர் விரைந்து வந்து நிலைமையை ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை கிராமத்தில், வீட்டின் மேல் மரம் விழுந்ததில் சுவர் இடிந்தது. இதில், ரவி என்பவரது மகளான 9-ம் வகுப்பு மாணவி திவ்யா(14) இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அப்பகுதியில் சில மரங்களை மட்டுமே தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தியதாக கூறி பொதுமக்கள் காஞ்சிபுரம்-உத்தரமேரூர் சாலையில் மறியல் செய்தனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
கீழ்அம்பி பகுதியைச் சேர்ந்த துலுக்கானம், நீலகண்டன், ராஜூ ஆகியோர் தாங்கள் வளர்க்கும் 50 ஆடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்றனர். கடும் புயலில் சிக்கிய ஆடுகள் ஏரிக்கால்வாயில் விழுந்தன. ஏரியில் அடித்துச் செல்லப்பட்டவை போக 19 ஆடுகளே மீட்கப்பட்டன.