சென்னை மாநகராட்சி பகுதிகளில் 537 இயந்திரங்கள் மூலம் மழைநீர், கழிவுநீர் அகற்றும் பணி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 537 இயந்திரங்கள் மூலம் மழைநீர், கழிவுநீர் அகற்றும் பணி
Updated on
1 min read

சென்னை: சென்னையில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 177 ஜெட்ராடிங் மற்றும் 60 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் மழைநீர் மற்றும்கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் பேரிடர்கால நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 15 கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில், 15 செயற்பொறியாளர்கள், 156 உதவிப் பொறியாளர்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, அனைத்து பகுதிஅலுவலகங்களிலும் இரவு நேரங்களில் களப்பணிகளைக் கண்காணிப்பதற்காக 15 செயற் பொறியாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மழைக்காலங்களில் 15 பகுதி அலுவலகங்களிலும் துணை பகுதிப் பொறியாளர் தலைமையில் உதவிப் பொறியாளர் மற்றும் தேவையான பணியாளர்கள், இயந்திரங்கள் கொண்ட சிறப்பு இரவுப் பணிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் குழாய்கள், குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் கழிவுநீர் குழாய் இணைப்புகளில் ஏற்படும் அடைப்புகளைச் சரிசெய்ய ஏதுவாக 300 தூர்வாரும் இயந்திரங்கள், 177 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 60 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 537 வாகனங்கள் மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 321 கழிவுநீர் நீரேற்று நிலையங்கள் மூலம்கழிவுநீர் உறிஞ்சப்பட்டு 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்டு முறையாகவெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலக்காமல் இருக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கழிவுநீர் செல்லும் பிரதான குழாய்களில் தூர்வாரும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது அடைப்பு ஏதும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் தொடர்கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

புகாரின் மீது உடனடி நடவடிக்கை: பொதுமக்கள் மழைநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை புகார் பிரிவு எண் 044-45674567 (20 இணைப்புகள்) கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மூலம் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைக்காலங்களில் குடிநீர் விநியோக நிலையங்களில் தேங்கும் மழைநீரை இறைக்க 16 பெரிய நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் 92 சிறிய நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in