Published : 13 Dec 2022 06:35 AM
Last Updated : 13 Dec 2022 06:35 AM
திருவள்ளூர்/காஞ்சி/கல்பாக்கம்: பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட நிலையில் நேற்று அதன் அளவு விநாடிக்கு 7,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 100 கனஅடியாக இருந்த உபரி நீர் வெளியேற்றம், நேற்று விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிக்கப்பட்டது. மேலும் பாலாற்று தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேன்டூஸ் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 8-ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த 9-ம் தேதி முதல் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன்படி, பூண்டி ஏரியில் விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் மழைநீர், மற்றும் கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து, இரு தினங்களுக்கு முன்பு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியை தொட்டது.
இதையடுத்து ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்ததால், திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அந்த அளவு நேற்று முன்தினம் 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியானது. இதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் 7 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 8,200 கன அடியாக மீண்டும் அதிகரித்தது. இதனால் உபரி நீர் திறப்பு விநாடிக்கு 7500 கனஅடியாக உயர்த்தப்பட்டது. மேலும் சென்னைக்கு குடிநீர் தரும் மற்றொரு முக்கிய ஏரியான செம்பரம்பாக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு விநாடிக்கு 100 கனஅடியாக இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை நீர்வரத்து அதிகரித்ததால் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடியாகவும் பிறகு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 4,297 கனஅடியாக இருந்ததால், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.
பிச்சாட்டூர் அணை திறப்பு: ஆந்திர மாநிலம்- நகரி அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த அளவு விநாடிக்கு 300 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும் நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை பிச்சாட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,300 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் நேற்று மாலை 4 மணி முதல் மீண்டும் அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. 1.85 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 1.54 டிஎம்சி நீர் உள்ளது.
பாலாற்று தடுப்பணைகள்: இதேபோல் பாலாறு மற்றும் காஞ்சி வேகவதி ஆறுகளிலும் நீர்வரத்து பெருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வேகவதி ஆற்றில் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. ஆற்றங்கரையோர வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வேகமாக செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் பாலாற்றின் குறுக்கே உள்ள பழையசீவரம், வல்லிபுரம் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. வாயலூர் பாலாற்று தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 36 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேறி கடலில் கலந்து வருகிறது. ஆகவே, பாலாறு கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனிடையே பூண்டி ஏரியில் திறக்கப்பட்டுள்ள உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளத்தால் ஏரி அருகில் உள்ள தரைப்பாலம், திருவள்ளூர் அருகே மெய்யூர்- மொன்னவேடு தரைப்பாலம் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன. மேலும் ஒதப்பை தரைப்பாலம் மூடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT