

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே, சென்னை மேயர் பதவியை பிடிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கடும் போட்டி எழுந்தநிலையில், அப்பதவி தலித் மகளிருக்கு ஒதுக்கப்பட்டது.
74-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஆர்.பிரியாவை தேர்ந்தெடுத்தார் முதல்வர் ஸ்டாலின். சென்னை மேயராக கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றார் பிரியா. அப்போது அவருக்கு 28 வயது. வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். சென்னை மாநகராட்சியின் இளம் மேயர், முதல்தலித் பெண் மேயர், வடசென்னையை சேர்ந்த முதல் மேயர் போன்ற சிறப்புகளை பெற்றார்.
பாரம்பரியமாகவே திமுக குடும்பத்தை சேர்ந்தவர்தான். மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ செங்கை சிவம், இவரது உறவினர். பிரியாவின் தந்தை ராஜன், பெரம்பூர் பகுதி திமுக நிர்வாகி. பிரியாவும் தனது 18-வது வயதில் கட்சியில் சேர்ந்துள்ளார். மேயர் பதவிக்கு பிரியாவை அமைச்சர் சேகர்பாபுதான் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
மேயராக பிரியா பதவியேற்றது முதலே சர்ச்சைக்கு பஞ்சமில்லை. சமூக வலைதள மீம்ஸ் கார்டு மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து விமர்சித்தன. அமைச்சர் கே.என்.நேரு இவரை ஒருமையில் பேசினார் என்றும், அமைச்சர் சேகர்பாபுவுக்கு இவர் குடை பிடித்தார் என்றும் வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள், முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் மேயர் பிரியா தொங்கிச்சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னையில் மேன்டூஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி பார்வையிட்டார். காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு முதல்வர் வந்தபோது, ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர் உள்ளிட்டோருடன் முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தின் படியில் மேயர் பிரியா தொங்கியபடி சென்றார்.
அதேபோல அந்த வாகனத்தில் படியில் தொற்றிக் கொள்வதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஓடிவருகிறார். இந்த வீடியோ காட்சியைத்தான் வலைதளங்கள் வைரலாக்கி சர்ச்சையாக்கியுள்ளன. ‘பொறுப்புள்ள மேயர் இப்படி நடந்துகொள்வதா? திமுகவில் பெண்களுக்கு சம உரிமை இல்லை’ என வலைதளங்களில் குரல்கள் எழுந்தன.
மேயர் பிரியா தொங்கிச் செல்லும் படங்களை ட்விட்டரில் பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘சுயமரியாதை இயக்கம், சமூக நீதி இயக்கம், சாமானியர்களின் கட்சி போன்ற திமுகவின் பொய்க் கதைகள் எல்லாம் இறந்தும், புதைந்தும் போய் வெகு நாட்கள் ஆகிவிட்டன’ என பதிவிட்டார்.
அதே வாகனத்தில் பிரியாவுடன் தொங்கிச் சென்ற ஆர்.கே.நகர் திமுகஎம்எல்ஏ எபினேசர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாங்கள் மக்களின் தேவைக்காக ஓடுகிறோம். தேர்தலுக்காக இல்லை’ என பதிவிட்டதோடு, தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி வாகனத்தின் படியில் நின்று மக்களை நோக்கி கையசைத்த படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘‘முதல்வருடன் செல்ல வேண்டும் என்ற துடிப்போடு நடந்த செயல் இது. ஆணுக்குநிகராக ஒரு பெண், துணிச்சலுடன் செய்யும் பணிகளை பாராட்ட வேண்டுமே தவிர, விமர்சிக்க கூடாது’’ என்று கூறியுள்ளார்.
சர்ச்சைக்குள் சர்ச்சை: முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தின் காப்பீடு காலாவதி ஆகிவிட்டது என்று வலைதளங்களில்எழுந்த குற்றச்சாட்டு குறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் கூறியபோது, ‘‘மோட்டார் வாகன சட்டப்பிரிவின்படி, எந்த ஒரு வணிக நிறுவனத்துடனும் தொடர்பு இல்லாத, அரசு பணி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மத்திய, மாநிலஅரசு வாகனங்களுக்கு காப்பீடுதேவை இல்லை. அரசு வாகனங்களுக்கு காப்பீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அரசு வாகனங்களால் விபத்து ஏற்பட்டால், இழப்பீட்டை அரசே வழங்கிவிடும்’’ என்றனர்.
மேயர் ஆர்.பிரியா விளக்கம்: இவ்வித சர்ச்சைகள் குறித்து மேயர் ஆர்.பிரியா கூறும்போது, “அமைச்சர் கே.என்.நேரு என்னை ஒருமையில் பேசவில்லை, என்னை மகள் போல் கருதி பேசினார். அமைச்சர் சேகர்பாபுவுக்கு குடைபிடித்தது இயல்பான செயல்தான். மழையின்போது குடைபிடிப்பது தவறு இல்லை.
மாநகராட்சி சார்பில் ஏராளமான பணிகளை செய்து வருகிறோம். புயல் தாக்கியபோது, இரவெல்லாம் தூக்கமின்றி பணியாற்றினர். தனிப்பட்ட எனது செயலை வைரலாக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அதற்கு பதிலாக, மாநகராட்சியின் மக்கள் நலப் பணிகள் மற்றும் பணியாளர்களின் தியாகங்களை சமூகவலை தளங்களில் வைரலாக்கலாம்” என்றார்.