Published : 13 Dec 2022 04:30 AM
Last Updated : 13 Dec 2022 04:30 AM
கடலூர்: கடலூர் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். புதிய வீட்டிற்காக பள்ளம் தோண்டி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பள்ளத்தில் நாய் ஒன்று 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது.
அப்போது அங்கு நல்ல பாம்பு ஒன்று வந்தது. அந்த நல்ல பாம்பு நாய் குட்டிகளின் அருகில்அப்படியே படமெடுத்து நின்றது. அப்பகுதிவாசிகள் யாரையும் குட்டிகளிடம் நெருங்க விடாமல் நின்று கொண்டது. அப்போது அங்கு வந்த தாய் நாய் தனது குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது.
அந்த நல்ல பாம்பு, தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. குட்டிகளை பாதுகாக்கும் நோக்கில் நல்ல பாம்பு இவ்வாறு இருந்ததாக பொது மக்களில் ஒரு சாரார் தெரிவித்தனர். அந்த நாய் குட்டிகளை உண்ணும் நோக்கில் கூட வந்திருக்கலாம். ஆட்கள் வந்ததும், ஒரு பதற்றத்தில் பாம்பு அப்படியே படமெடுத்து நின்றிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த கடலூர் வன அலுவலர் செல்லா சம்பவ இடத்திற்கு சென்று அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக காப்புக் காட்டில் விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT