வெள்ளம் வடிந்த பிறகு செய்யக்கூடியது, செய்யக்கூடாதது: பொதுமக்களுக்கு அரசு 17 அறிவுரைகள்

வெள்ளம் வடிந்த பிறகு செய்யக்கூடியது, செய்யக்கூடாதது: பொதுமக்களுக்கு அரசு 17 அறிவுரைகள்
Updated on
1 min read

வெள்ளம் வடிந்த பிறகு செய்யக்கூடியது, செய்யக்கூடாதது குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு வழிகாட்டுதல் குறிப்புகளை வழங்கியுள்ளது. அவை:

* பாதுகாப்பான நிலை திரும்பும் வரை வெள்ளம் வடிந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்.

* வெள்ளம் வடிந்த பின்னரும் ஆற்றங்கரைக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும்.

* வெள்ளம் புகுந்த கட்டிடத்துக்குள் செல்லும் முன், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும். நுழையும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

* கட்டிடத்தை சுற்றியோ, கட்டிடத்தின் உள்ளேயோ வெள்ள நீர் இருந்தால் உள்ளே நுழையக்கூடாது.

* கட்டிடத்தில் விரிசல், சேதம் உள்ளதா என்பதையும் அனைத்து சுவர், தரைப் பகுதிகள், மேற்கூரை, ஜன்னல் ஆகியவற்றையும் ஆய்வு செய்யவும்.

* கட்டிடத்துக்குள் உள்ள மின் இணைப்புகள், தரையில் இருக்கும் அடுப்புகள், கொதிகலன்கள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் மோட்டார் பம்பு போன்ற இதர மின் உபகரணங்களை முறையாக சோதனை செய்ய வேண்டும்.

* வடிகால் அமைப்பில் உடைப்பு ஏற்பட்டு இருந்தால், கழிப்பறை மற்றும் தண்ணீர் உபயோகத்தை நிறுத்திவிட வேண்டும்.

* வெள்ள நீரில் நனைந்த மருந்துகள், உணவு, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள் மற்றும் தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

* மின் உபகரணங்களில் சேதம் ஏற்பட்டிருந்தால் மின் இணைப்பை உடனே துண்டிக்க வேண்டும்.

* கொதிக்க வைத்து, குளோரின் கலந்த பாதுகாப்பான நீரை பருகவும்.

* பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான பாதைகளையே உபயோகிக்கவும்.

* தாழ்வான மின் கம்பிகள் அருகே செல்லக் கூடாது.

* சிறிய காயங்களையோ, நோய் அறிகுறிகளையோ அலட்சியப்படுத்தக்கூடாது. தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக நாடவும்.

* வெள்ளம் வந்த வீடுகளில் மீண்டும் காஸ் அடுப்புகளை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

* வெள்ளப் பகுதியில் குழந்தைகள் விளையாட தடை விதிக்க வேண்டும்.

* வெள்ள நீரில் நனைந்த அனைத்து பொருட்களையும் சுத்தப்படுத்தியும், தேவை எனில் கிருமி நீக்கியும் பயன்படுத்தவும்.

* மின் உபகரணங்களை, வெள்ளம் பாதிக்கும் வாய்ப்புள்ள உயரத்துக்கு மேலாக பொருத்தி வைக்கவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in