Published : 13 Dec 2022 04:17 AM
Last Updated : 13 Dec 2022 04:17 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் நேற்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆம் ஆத்மி, தமிழ்த் தேச தன்னுரிமை கட்சி, தமிழ்நாடு மக்கள் கட்சியினர் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் என,200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டனர்.
பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஆட்சியர் அலுவலக வாயில் பகுதியில் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதன்பின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 100 பேர் மட்டும் ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று ஆட்சியர் கி.செந்தில்ராஜிடம் மனு அளித்தனர்.
மனுவில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உறுதியளித்தார். ஆனால், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், நீதிபதிஅருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையில், துறை ரீதியானநடவடிக்கையை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையையும் அளிக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீதும், அதற்கு துணைபோன அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்றிஸ்டெர்லைட் ஆலையை அகற்றவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 அடுக்கு பாதுகாப்பு: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மனு அளிக்க வந்த நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் எஸ்பிக்கள் பாலாஜி சரவணன் (தூத்துக்குடி), சரவணன் (திருநெல்வேலி) , தங்கதுரை (ராமநாதபுரம்) ஆகியோர் தலைமையில் கலவரத் தடுப்பு போலீஸார், அதிரடிப்படையினர் உள்ளிட்ட சுமார் 800 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். வஜ்ராவாகனம், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மேலும், ஸ்டெர்லைட் ஆலை பகுதி, சுற்றியுள்ள கிராமப் பகுதிகள்மற்றும் தூத்துக்குடி நகரின் முக்கியப் பகுதிகளிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும்அனைத்து முக்கியச் சாலைகளிலும் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்களை அனுமதித்தனர். தென்மண்டல ஐஜி அஸ்ராகர்க், திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ்குமார் ஆகியோர் எஸ்பி அலுவலகத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT