Published : 13 Dec 2022 04:15 AM
Last Updated : 13 Dec 2022 04:15 AM
வேலூர்: மேன்டூஸ் புயல் தாக்கத்தால் பெய்து வரும் தொடர் மழையால், கவுன்டன்யா ஆற்றில் 989 கன அடிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் நீர்வரத்தால் குடியாத்தம் பகுதியில் உள்ள 2 ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்ட மேன்டூஸ் புயல் கரையை கடந்த பிறகும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 10-ம் தேதி புயல் கடந்த நிலையில் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை பரவலான மழை பெய்தது. ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாத நிலையில் பிற்பகல் 3 மணிக்குள் பள்ளி செயல்பாடுகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பொன்னை பகுதியில் 22, குடியாத்தம் 2.6, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 2, வேலூர் 4.2, பேரணாம்பட்டு 1.7, கே.வி.குப்பம் 1 மி.மீ மழை பதிவாகி இருந்தன. வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 33 வீடுகள் பகுதியளவும், 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. மாவட்டத்தில் மொத்தம் 94 விவசாயிகளின் 59.18 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நிரம்பிய ஏரிகள்: கவுன்டன்யா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மோர்தானா அணைக்கான நீர்வரத்து நேற்று காலை 989 கன அடியாக இருந்தது. மோர்தானா அணை ஏற்கெனவே முழுமையாக நிரம்பியதால் 989 கன அடி நீரும் கவுன்டன்யா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஜிட்டப்பள்ளி பிக்-அப் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, வேலூர் மாவட்டத்தின் பெரிய ஏரியாக உள்ள நெல்லூர்பேட்டை ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கவுன்டன்யா ஆற்றில் இருந்து ஏரிக்கு தொடர் நீர்வரத்து காரணமாக ஏரி முழுவதுமாக நேற்று நிரம்பியதுடன், உபரி நீர் வெளியேறியது. அதேபோல், சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட செட்டிக்குப்பம் ஏரியும் நேற்று முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது.
இதையடுத்து, செட்டிக்குப்பம் ஏரியில் உபரி நீர் வெளியேறும் பகுதியில் குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித் துறை அதிகாரிகள், பொது மக்கள் என ஒன்று திரண்டு மலர் தூவி நீரை வரவேற்றனர். வேலூர் அருகேயுள்ள செதுவாலை ஏரியும் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் இதுவரை 24 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT