Last Updated : 12 Dec, 2022 10:57 PM

 

Published : 12 Dec 2022 10:57 PM
Last Updated : 12 Dec 2022 10:57 PM

‘கல்வி உரிமை சிறை கைதிகளுக்கும் உண்டு’ - நூலக வசதியை மேம்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ‘அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கல்வி உரிமை சிறை கைதிகளுக்கும் உண்டு’ என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் உள்ள நூலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கவும், நூலகங்களுக்கு பணியாளர்கள் நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்ய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் 22,792 கைதிகளை அடைக்க முடியும். தற்போது 601 பெண்கள், 112 வெளிநாட்டினர் உட்பட 13,969 கைதிகள் உள்ளனர். இந்த கைதிகளில் 56.9 சதவீதம் பேர் விசாரணை கைதிகள். பொதுமக்களை பொருத்தவரை கைதிகளை திருத்தும் இடமாக சிறைச்சாலையை பார்க்கின்றனர். சட்ட அமைப்புகளில் ஒன்றான சிறைச்சாலைகள் கைதிகளுக்கு சட்டக் கல்வி வழங்கி, அவர்களை சட்டத்தை மதித்தும் நடக்கும் குடிமகன்களாக பழக்குகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின் வழங்கப்பட்டுள்ள கல்வி உரிமை சிறைக் கைதிகளுக்கும் உண்டு. இதற்காக சிறைகளிலும் நூலகங்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. டிஜிட்டல் நூலகங்கள் சிறைக் கைதிகளை தற்போதைய மின்னணு உலகில் வாழ்வதற்கு தயார்படுத்தவும், தகவல், தொழில்நுட்ப வசதிகளை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. இதனால் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக சிறைத்துறை கூடுதல் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்" இவ்வாறு கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x