

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதியை தமிழக அமைச்சராக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தார். இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கிறார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதியை தமிழக அமைச்சரவையில் அமைச்சராக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தார். முதல்வரின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. வரும் 14-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ராஜபவன் தர்பார் ஹாலில் காலை 9.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று காலை முதலே தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பதவியேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கான அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், திமுக அமைச்சர்கள் பலரும், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, திமுகவில் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. கட்சியின் இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வானார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற உதயநிதியின் பிறந்தநாளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என நிர்வாகிகள் பட்டாளமே அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது.
பிறந்த நாள் அன்று நடந்த நிகழ்ச்சியில் ‘தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா’ என உதயநிதியிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, அதை முதல்வர்தான் முடிவு செய்வார் என்றார். இதனிடையே, அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உதயநிதிக்கு சாதகமான கருத்துக்களை தெரிவித்தனர்.
முக்கிய பதவியை உதயநிதி பெற்றுவிட்ட நிலையில், அடுத்தது அமைச்சராகவும் முக்கியத்துவம் பெறவேண்டும் என அமைச்சர்கள் உள்ளிட்ட அவரது நலன் விரும்பிகள் எண்ணினர். திமுக அரசு பொறுப்பேற்றதுமே இதே கருத்துகளை அமைச்சர்கள், நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். ஆனால், அப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஆனால், இந்த முறை அமைச்சர்களின் கருத்துகளுக்கு உயிர் வந்தது. அவர்கள் எண்ணம் பொங்கலுக்குள் நிறைவேறும் நிலையில் உள்ளதாகவும், அமைச்சரவையில் இடம்பெறும் உதயநிதி, இளைஞர் நலத் துறையை கவனிக்கப் போவதாகவும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இதுதவிர ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் இருக்கலாம் என்றும் பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது.