Published : 12 Dec 2022 07:59 PM
Last Updated : 12 Dec 2022 07:59 PM
புதுடெல்லி: அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் முறைகேடாக வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, வீட்டுமனைகள் ஒதுக்கும் வகையில் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல், ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008-ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி சுயலாபம் அடைந்ததாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி, அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட், அவரது மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக 2013-ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கைப் பதிவு செய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறாததால், ஜாபர் சேட், வீட்டுவசதி வாரியத்தின் அப்போதைய செயல் பொறியாளர் முருகையா மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர் சேட்டின் மனைவி பர்வின் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2019-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐ.பெரியசாமி, பர்வின் உள்பட நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு புலன் விசாரணையில் திரட்டப்பட்ட ஆவண ஆதாரங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து இவர்களுக்கு எதிராக வழக்கை தொடர போதுமான ஆதாரங்கள் உள்ளதாகச் சுட்டிக்காட்டி, வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்
இந்த மனு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்ததுஅப்போது ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இந்த வழக்கைப் பொறுத்தவரை ஒதுக்கீடு செய்ய அனுமதியளித்து கையொப்பமிட்ட இணை செயலாளர், செயலாளர் ஆகியோரை வழக்கில் சேர்க்கவில்லை. மாறாக இறுதியில் ஒதுக்கீட்டை அங்கீகரித்த மனுதாரர் மீது 420 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். எதன் அடிப்படையில். வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறித்தும் விளக்கம் இல்லை" என்று கூறினார்.
அப்போது நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் யார் ஆதாயம் பெற்றார்கள்? என்ற கேள்வி எழுகிறது. எனவே, தற்போதைய நிலையில் இந்த வழக்கு விசாரணையில் தலையிட விரும்பவில்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக உத்தரவிட்டனர்.
மேலும், இந்த முறைகேடு தொடர்பான விசாரணையைத் தொடரவும், ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு, ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT