

சென்னை: அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்த வார்டு வாரியாக குறைதீர்வுக் கூட்டங்களை நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழுத் தலைவர், மண்டல தலைவர் உள்ளிட்ட பதவிகள் உள்ளன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கான விதிகளை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு வெளியிட்டது.
இதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் 5 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 4 முதல் 5 ஏரியா சபைகளும், 5 முதல் 10 லட்சம் வரை உள்ள மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 6 முதல் 9 ஏரியா சபைகளும், 10 லட்த்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 ஏரியா சபைகளும், நகராட்சிகளில் ஒரு வார்டில் 4 சபைகளும், பேரூராட்சியில் ஒரு வார்டில் 3 சபைகளும் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக மாநகர சபை கூட்டம் கடந்த நவம்பர் 1-ம் தேதி பல்லாவரம் அருகே பம்மல் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டார். இந்நிலையில் இதுபோன்ற அனைத்து மாநகராட்சிகளிலும் வார்டு சபை அமைக்கப்பட்டுள்ளது. வார்டு சபை கூட்டங்களை குறைதீர்வு கூட்டங்களாக நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகராட்சியில் வார்டு சபைக்கான எல்லைகளை வரையறை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வார்டு சபைக் கூட்டங்களை குறைதீர்வு கூட்டங்களாகவும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டு சபைக் கூட்டங்களில் சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இதன்மூலம் வார்டு அளவில் பொதுமக்கள் கூறும் சிறிய அளவிலான பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காண முடியும். இந்த நடைமுறை ஜனவரி மாதம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.