

காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்று, வார்தா புயலில் சிக்கிய 9 மீனவர்கள், 17 நாட்கள் கடந்த பின்னரும் இன்னும் கரை திரும்பவில்லை.
சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் படகு உரிமை யாளர்கள் சங்கத்தின் துணை தலைவராக இருப்பவர் ஜெயராம்(50). இவருக்கு சொந்த மான படகில் கடந்த 3-ம் தேதி காசிமேட்டை சேர்ந்த ராஜேந் திரன்(55), நிர்மல்ராஜ்(25), ரவிச் செல்வன்(50), மாதவவேலு(50), சிவா(25), வினோத்(23), அந் தோணிராஜ்(55), வெங்கட் ரமணன்(30), மல்லிகார்ஜுனன்(52) ஆகிய 9 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் கடந்த 12-ம் தேதி கரைக்கு திரும்பி இருக்க வேண்டும்.
இந்நிலையில், ‘வார்தா’ புயல் குறித்து வானிலை எச்சரிக்கை செய்தி அறிவித்ததும், கரையில் இருக்கும் உறவினர்கள் மீனவர் களுடன் தொடர்பு கொண்டு பேசி யுள்ளனர். அப்போது மீனவர்கள், ‘நாங்கள் மீன் பிடித்து முடித்து விட்டோம். திரும்பி வந்து கொண்டு இருக்கிறோம். 12-ம் தேதி மதியத் துக்குள் கரைக்கு வந்து விடுவோம்’ என்று தெரிவித்துள்ளனர். ஆனால் 12-ம் தேதி காலை 10 மணிக்கே புயல் அடிக்க ஆரம்பித்து விட்டது. இதனால் பயந்துபோன உறவினர் கள் மீண்டும் மீனவர்களுக்கு தொடர்பு கொண்டபோது, ‘நாங்கள் கரைக்கு அருகே 10 கடல் மைல் தொலைவில் வந்து விட்டோம். எங்களுக்கு கலங்கரை விளக்கம் தெரிகிறது. ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து படகை செலுத்த முடிய வில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.
அடுத்த சில நிமிடங்களில் காற்றின் வேகம் அதிதீவிரமாக மாறியது. புயல் ஏற்படுத்திய சேதத்தில் அனைத்து தொலை தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து விட்டன. மீனவர்களுடன் அதன் பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. கரைக்கு அருகே வந்து விட்டதாக சொல்லிய மீன வர்கள், கரைக்கும் வரவில்லை. இதனால் 9 மீனவர்களின் நிலைமை என்னவென்று மர்மமாக உள்ளது. அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
காணாமல்போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண் டும். அவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் மற்றும் கடற்படை கப்பல்களை உடனடியாக கடலுக்குள் அனுப்ப வேண்டும் என்று மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள், படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ள னர்.
படகின் ஓட்டுநராக ரவிச்செல் வன் இருந்துள்ளார். வெங்கட் ரமணன், மல்லிகார்ஜுனன் ஆகியோர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காற்றின் வேகத்தில் படகு ஆந்திரா அல்லது வேறு மாநிலத்துக்கு அடித்துச் செல்லப் பட்டதா? அண்டை மாநிலங்களில் ஏதும் படகு கரை ஒதுங்கி உள் ளதா? என்பது குறித்து முதல்கட்ட விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.