முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் சமரசம்: உயர் நீதிமன்றத்தில் தனியார் பால் நிறுவனங்கள் தகவல்

ராஜேந்திர பாலாஜி | கோப்புப்படம்
ராஜேந்திர பாலாஜி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தரமற்ற பால் விற்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய விவகாரத்தில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தள்ளது. இதைக் குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்று பேட்டி அளித்திருந்தார். தங்கள் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதிக்கக் கோரியும், தங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும் ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் டெய்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக ஆதாரம் இல்லாமல் பேச ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதித்திருந்தார். இதன்பின்னர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி உடனான பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இருப்பதாக பால் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே சமசரம் ஏற்பட்டுவிட்டதால் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தனியார் பால் நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பால் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற அனுமதியளித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in