

புதுச்சேரி: “புதுச்சேரியில் திமுக ஆட்சி உதயமாகும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதில் தவறில்லை” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதில் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் மதச்சார்பற்ற அணிக்கு காங்கிரஸ்தான் தலைமை வகிக்கும் என்று நாராயணசாமி தெரிவித்திருந்தார். திமுகவுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க முடியாது என்று திமுக மாநில அமைப்பாளர் சிவா பதில் தந்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் திமுக ஆட்சி உதயமாகும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் திமுக ஆட்சி உதயமாகும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதில் தவறில்லை. அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய ஆட்சி வரவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சமீபத்தில் குஜராத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கூட ஆட்சியமைப்போம் என்று கூறினார்கள்" என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''ஐந்து ஆண்டுகள் அமைச்சராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த நமச்சிவாயம், காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்துக்கும் ஒப்புதல் தந்தார். ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே அவருக்கும், ஆளுநருக்கும் தொடர்பு இருப்பதாகவும் புகார்கள் வந்தன. அதை நான் ஏற்கவில்லை. தற்போது அப்புகார்கள் ஊர்ஜிதம் ஆகியுள்ளது.
நான் அரசு ரீதியாக கல்வித் துறையில் எப்பணிகளும் நடக்கவில்லை. திட்டங்கள் நடக்க நிதியில்லை என்று கூறியிருந்தேன். அரசு ரீதியான குற்றச்சாட்டுக்கு பதில் தராமல், தனிநபர் விமர்சனத்தை நமச்சிவாயம் செய்துள்ளார். இதுவரை ஆறு கட்சிகள் மாறிய நமச்சிவாயத்துக்கு என்னைப் பற்றி விமர்சிக்க அருகதையில்லை. விரைவில் அவர் ஏழாவது கட்சிக்கும் மாறுவார். அவரை பாஜக ஏமாற்றியுள்ளது. அவரது முதல்வர் பேராசை, கனவாகவே மாறிவிட்டது.
ஒரே கட்சியில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் தொடர்ந்து பணியாற்றக்கூடிய என்னை பற்றியோ, கட்சியைப் பற்றியோ விமர்சிக்கும் தகுதி அவருக்கு இல்லை. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. முதல்வர் அலுவலகத்தில் புரோக்கர்கள் இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறேன். இதற்கு அரசு தரப்பில் இருந்து யாரும் பதில் தரவில்லை.
ஊழல்களை ஆதாரத்தோடு காங்கிரஸ் தொடர்ந்து வெளிப்படுத்தும். முதல்வர் அலுவலகத்திலுள்ள புரோக்கர்கள் சொத்து விவரம், அமைச்சர் பினாமி பட்டியல்கள் ஆகியவை விரைவில் வெளியிடப்படும். அவசர சட்டத்தை கொண்டு வந்து புதுச்சேரி சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும்" என்றார்.