

மதுரை: அறநிலையத் துறையில் போலிச் சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். மதுரை அழகர்கோவில் ராக்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா, சோலைமலை முருகன் கோயிலில் வெள்ளிக் கதவுகள் அமைக்கும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில்களுக்கு வரவேண்டிய ரூ.260 கோடி நிலுவைத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்துரூ.3,884 கோடி அளவுக்கு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 394 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. 1,500 கோயில்களில் ரூ.1000 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெறுகின்றன.மீனாட்சி அம்மன் வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தியுள்ளோம்.
நீதிமன்ற உத்தரவுப்படி 48 முதுநிலை கோயில்களில் மொபைல் போன் கொண்டு செல்லதடை அமல்படுத்தப்படும். திருத்தணி, சதுரகிரி, பருவதமலை, கண்ணகி ஆகிய கோயில்களில் மாற்றுப்பாதை அமைக்க வனத் துறையோடு இணைந்து ஆய்வு செய்து வருகிறோம். அறநிலையத் துறையில் போலிச் சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்தவர்கள் குறித்து ஆதாரம் இருந்தால் தாருங்கள். உண்மை இருந்தால் நாங்களே விசாரித்து அவர்களை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆட்சியில் 10 சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து 82 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. களவுபோன 126 சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன சிலை கடத்தல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.