

திருச்சி/ அரியலூர்: அரியலூர் அருகே போலீஸார் தாக்கியதால் விவசாயி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக உண்மை கண்டறியும் குழு கோரிக்கை விடுத்துள்ளது. அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் மீது அண்மையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த அவரது மாமனார் ஜம்புலிங்கம்(60) என்பவரின் வீட்டுக்கு அரியலூர் போலீஸார் சென்று விசாரணை நடத்தியபோது, அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், டிச.8-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஜம்புலிங்கத்தை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜம்புலிங்கம் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ஜம்புலிங்கத்தின் உறவினர் கார்த்திகேயன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின்பேரில், தஞ்சை, திருச்சி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை நியமித்து ஜம்புலிங்கம் உடலை பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீது காவல் துறை பதில் அளிக்கவும் உத்தரவிட்டார். அதன்படி, மருத்துவர்கள் குழுவின் மேற்பார்வையில் நேற்று காலை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஜம்புலிங்கத்தின் உடல் அவரது மகன் மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிறகு, அவரது உடல் காசாங்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. இதனிடையே பாமக சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவினர், ஜம்புலிங்கம் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு
செய்தியாளர்களிடம் கூறியது:விவசாயி ஜம்புலிங்கம், காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும், வீட்டில் உள்ள அவரது மனைவி, மகனையும் காவல் துறையினர் தாக்கியுள்ளனர். வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். காவலர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர். மருத்துவமனையில் ஜம்புலிங்கம் சிகிச்சை பெற்றபோது, தன்னை 8 காவலர்கள் தாக்கியதாக அவர் கூறியும், அதுதொடர்பாக உரிய வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
காவலர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் பாமக சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையை விரைவில் வெளியிடுவோம்.
சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்ற வேண்டும். 8 காவலர்களையும் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஜம்புலிங்கம் மகன் மணிகண்டனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார். உண்மை கண்டறியும் குழுவைச் சேர்ந்த எம்எல்ஏ சி.சிவக்குமார், உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி, ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், செய்தி தொடர்பாளர் வினோபாபூபதி உடனிருந்தனர்.