

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாற்றத்துக்கான மாநாடு என்ற தலைப்பில் பாஜக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: மக்களவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 17 மாதங்கள் உள்ளன.
திமுக அரசுக்கு நிர்வாக கோளாறு. தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ரூ.38 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.4 ஆயிரம் கோடி அதிகமாகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, டாஸ்மாக்கை மூட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கொடிபிடித்து போராட்டம் நடத்தினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின் மவுனமாகிவிட்டார். கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.3,500 கூடுதலாக செலவாகிறது.
மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு நெல் கொள்முதலின்போது ஒரு மூட்டைக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை கமிஷன் வாங்குகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் 6 கால பூஜை நடப்பது கிடையாது. கோயிலில் உள்ள விளக்குக்கு திரி, எண்ணெய் வாங்க வேண்டுமென்றால் கூட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் சம்ஸ்கிருதத்துக்காக ரூ.641 கோடி செலவழித்துள்ளதாக கனிமொழி கூறியுள்ளார். இந்தியாவில் 18 சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில், 17 பல்கலைக்கழகங்கள் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் தொடங்கப்பட்டவை.
தமிழுக்காக பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் 1981-ல் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 5 தமிழ் பல்கலைக்கழகங்கள் தொடங்குங்கள். அதற்கு நிதி மத்திய அரசு கொடுக்கும். அடுத்தமுறை கனிமொழி தூத்துக்குடியில் வெற்றிபெற முடியாது.
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 25 எம்பிக்கள் பாஜகவுக்கு கிடைப்பார்கள். அதில், 5 பேர் கேபினட் அமைச்சர்களாவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி பங்கேற்றனர்.