

தமிழகம் முழுவதும் தமாகா சார்பில் மரக் கன்றுகள் நடச் சொல்லி மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் எழுத உள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வார்தா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு மத்திய அரசிடம் ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையேற்று மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை மாநில அரசும் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு வழங்கியுள்ள நிவாரணத் தொகை குறைவாக உள்ளது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்.
மரங்கள் மீண்டும் நடப்பட வேண்டும் என்பது அவசியமானது மட்டுமல்ல, அவசரமானதும்கூட. இதை அரசும் செய்ய வேண்டும். சமூக அமைப்புகளும் செய்ய வேண்டும்.
மரங்கள் நடும்போது காற்று, மழையை தாங்கும் மரமாக கவனித்து நட வேண்டும். தமிழகம் முழுவதும் தமாகா சார்பில் மரக் கன்றுகள் நட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுத உள்ளேன். ஜனவரி மாதம் முதல் மரக் கன்றுகள் நடும் பணி தொடங்கும்.
நாடாளுமன்றத்தில் பேச பிரதமர் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. 99 சதவீத மக்கள் இன்னமும் புதிய 500 ரூபாய் நோட்டை பார்த்ததில்லை. வருமான வரித் துறையின் சோதனையில் மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் பிடிபடுகின்றன. இதை அரசு ஏன் தடுக்கவில்லை என்றார்.