Published : 12 Dec 2022 07:27 AM
Last Updated : 12 Dec 2022 07:27 AM

100 வயதை நிறைவு செய்த தெற்கு ரயில்வே தலைமையக கட்டிடம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தெற்்கு ரயில்வே தலைமையக கட்டிடம் நேற்று 100 வயதை நிறைவு செய்தது.

சென்னை: தெற்கு ரயில்வே தலைமையக கட்டிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. சென்னையில் உள்ள பாரம்பரியமிக்க கட்டிடங்களில் இதுவும் ஒன்று. 1915-ம் ஆண்டு பிப்.8-ம்தேதி இதன் கட்டமைப்புக்கு அடித்தளம் அமைத்தவர் அப்போதைய சென்னை கவர்னர் லார்டு பென்ட்லன்ட். இக்கட்டிடம், என்.கிரேசன் என்ற கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு, பெங்களூருவை சேர்ந்த ஒப்பந்ததாரர் டி.சாமிநாத பிள்ளையால் கட்டப்பட்டது.

இது, திராவிட பாணியை அடிப்படையாக கொண்ட இந்தோ - சாரசனிக் வகை அமைப்பாகும். 10 ஆயிரம் டன் கிரானைட் கான்கிரீட்டில் பதிக்கப்பட்ட 500 டன் இரும்புக் கம்பிகளைக் கொண்ட அடித்தளத்தை கட்டமைப்பதற்கு மட்டும் சுமார் ஏழரை மாதங்கள் ஆகியுள்ளன. பல ஆண்டு காலகடின உழைப்பு மற்றும் ரூ.30,76,400 செலவில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பின்னர், 1922-ம் ஆண்டு டிச.11-ம் தேதி அப்போதைய மெட்ராஸ் கவர்னர் ஃப்ரீமேன் தாமஸ் வெலிங்டனின் மனைவியால் (லேடி வெலிங்டன்) இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை தாங்கி நிற்கும் இந்த பாரம்பரிய கட்டிடம் நேற்று 100-வது ஆண்டை நிறைவு செய்தது.

இதையொட்டி, 60 பேர் கொண்ட குழுவினர் நேற்று இந்தகட்டிடத்தை சுற்றிப் பார்த்தனர். கட்டிடத்தின் வரலாற்றுச் சிறப்பு குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.

நூற்றாண்டை நிறைவு செய்த பாரம்பரியமிக்க இந்த கட்டிடத்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x