

சிவகங்கை மாவட்டம், இளையான் குடியில் ரூ.30 லட்சம் கொள்ளை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.
மதுரை மீனாட்சி பஜாரில் செல் போன் கடை நடத்தி வரும் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர், சிவகங்கையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு கமிஷன் அடிப்படையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கள் வழங்க கடந்த 15-ம் தேதி சிவகங்கைக்கு காரில் சென்றனர். அப்போது இவர்களை சுப்புராஜ் உள் ளிட்ட ஒரு கும்பல் தாக்கி ரூ.30 லட் சத்தை கொள்ளையடித்துச் சென்றது.
இவ்வழக்கு தொடர்பாக மந்தக் காளை என்ற அழகேசன், வீரபாண்டி, காளிதாஸ் ஆகிய மூன்று பேரை இளையான்குடி போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலரை பிடித்து விசாரிக்கின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
ரூ.30 லட்சம் கொள்ளையில் தொடர்புடையவர்களை விசாரித்த தில் கமிஷனுக்காக கொள்ளை அடிக்க கூட்டணி சேர்ந்துள்ளனர். ஆனால், பணத்தை கொள்ளை அடித்துச் சென்றவர்கள் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கைதானவர்கள் விசார ணையில் உண்மைத் தகவல்களை தர மறுப்பதால் மற்ற குற்றவாளிகளைப் பிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் திருப்பூர் சென்றுள்ளனர் என்றனர்.