

சென்னை: தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை நேற்று உயர்ந்து இருந்தது.
மேன்டூஸ் புயலால் சென்னையில் பெய்த மழை காரணமாக கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், காய்கறிகளை வாங்க சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை வியாபாரிகள் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு வரவில்லை. இதனால் காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேங்கின.
இதனால் இரு நாட்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் டன்காய்கறிகள் கோயம்பேடு சந்தையில் தேக்கம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.இதனிடையே புயல் கரையைக் கடந்த நிலையில், அதன் தாக்கத்தால் தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு நேற்று அதிகாலை குறைவான அளவே காய்கறிகள் வந்தன. வரத்து குறைந்ததால் அவற்றின் விலை உயர்ந்திருந்தது.
இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்க பொருளாளர் சுகுமார் கூறியதாவது: கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 470 லோடு காய்கறிகள் வரும். சனிக்கிழமை புயல் கரையைக் கடந்த நிலையில் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, விவசாயிகள் காய்கறிகளைப் பறித்து அனுப்பவில்லை.
அதன் காரணமாக சுமார் 330 லோடு காய்கறிகள் மட்டுமே வந்தன. வரத்துக் குறைவால் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. கிலோரூ.20 வரை விற்கப்பட்ட பீன்ஸ்ரூ.60, ரூ.25-க்கு விற்ற அவரைக்காய் ரூ.50, ரூ.20-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் ரூ.65, ரூ.200 விற்கப்பட்ட ஒரு மூட்டை கோஸ் ரூ.800 ஆக விலை உயர்ந்திருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.