

திருவள்ளூர்: நீர்வரத்து குறைந்ததால், பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் ஏரியை பார்வையிட்டார்.
மேன்டூஸ் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 8-ம் தேதி முதல் மழை பெய்துவருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளுக்கு நீர்வரத்துஅதிகரித்ததால், கடந்த 9-ம் தேதிமுதல், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர்வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதில், பூண்டி ஏரியில் விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு, நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் மழைநீர், கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நீர் வருகை காரணமாக பூண்டிக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதன்படி, நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் விநாடிக்கு6 ஆயிரம் கனஅடியாக இருந்தது. ஆகவே, அன்றைய தினம் இரவு ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
தொடர்ந்து, நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து மீண்டும் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அந்தளவு நேற்று காலை விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று மதியம் 3 மணிக்கு பூண்டி ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக இருந்தது. எனவே, அப்போது பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதனால், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,950 மில்லியன் கன அடியாகவும் நீர்மட்டம் 34.40 அடியாகவும் உள்ளது.
இந்நிலையில், பூண்டி, புழல் ஆகிய ஏரிகளில் நேற்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு, ஏரிகளின் நீர் இருப்பு, உபரி நீர் வெளியேற்றம் உள்ளிட்டவை குறித்து, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ’சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில்ஒன்றான பூண்டி ஏரியில் கூடுதலாக நீரை சேமிக்க கரையை உயர்த்தும் திட்டம் உள்ளது. ஏரியை பராமரிக்க, வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக நிதி ஒதுக்கி, பூண்டி ஏரி பூந்தோட்டமாக மாற்றப்படும். பொதுமக்கள் நீர்நிலைகளில் வீடுகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றார். இதேபோல் புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தலா விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஆந்திர அணைகள்: ஆந்திர மாநிலம்- நகரி அருகே உருவாகும் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள பிச்சாட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் விநாடிக்கு 500 கனஅடி வீதமும் பின்னர் விநாடிக்கு 300 கனஅடி வீதமும் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று உபரி நீரை திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதேபோல், சித்தூர் மாவட்டத்தில் உள்ளகிருஷ்ணாபுரம் அணையிலிருந்து விநாடிக்கு 173 கனஅடி உபரி நீர்திறக்கப்பட்டது. இந்நிலையில், நிர்வரத்து குறைந்ததால் நேற்று உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டது.