அமைச்சரான பிறகும் மாதம்தோறும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கும் சேகர்பாபு
சென்னை: அமைச்சரான பிறகும் கடும் பணிச்சுமை இருந்தாலும், மாதம்தோறும் சபரிமலை சென்று ஐயப்பன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு, சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
கேரள மாநிலம் சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெறும். இதற்காக கேரளா மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதம் இருந்து, இருமுடி எடுத்து வந்து, ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.
இது மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின்போதும், சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டு, 5 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அப்போதும், ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் மாதம்தோறும் தவறாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். சமீபகாலமாக அவரது மனைவியும் சபரிமலைக்கு சென்றுதரிசித்து வருகிறார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: நான் நினைவு தெரிந்த நாள் முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகிறேன். தவறாமல் மாதாந்திர பூஜைக்கும் சென்று வழிபடுகிறேன். 4-வது முறையாக எனது மனைவியும் சபரிமலைக்கு செல்ல இருக்கிறார்.
அமைச்சரான பிறகு அதிக அளவில் பணிகள் இருந்தாலும் சபரிமலைக்கு செல்வதை நிறுத்தவில்லை. அதற்கேற்ப, பணிகளை மாற்றிக்கொண்டு தவறாமல் சபரிமலைக்கு சென்று வழிபட்டு வருகிறேன். எனினும், மக்கள் பணிதான் எனக்கு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
