Published : 12 Dec 2022 06:49 AM
Last Updated : 12 Dec 2022 06:49 AM
சென்னை: மேன்டூஸ் புயல், கனமழையால் சென்னை விமான நிலையத்தில் பாதிக்கப்பட்டிருந்த விமான சேவை சீராகியுள்ளது. மேன்டூஸ் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களாகப் பலத்த மழை பெய்தது. இதனால், சென்னையில் 2 நாட்களாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
கடந்த 9-ம் தேதி 14 விமானங்களும், 10-ம் தேதி 19 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 2 மணி நேரத்துக்கு ஓடுபாதையும் மூடப்பட்டது.
சென்னையிலிருந்து மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களுக்குப் புறப்பட வேண்டிய 30-க்கும் மேற்பட்ட விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மோசமான வானிலையால் சென்னையில் தரையிறங்க முடியாத விமானங்கள் ஐதராபாத், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
புயல் கரையைக் கடந்ததாலும், மழை நின்றுவிட்டதாலும் சென்னையில் தற்போது விமான சேவை சீராகிஉள்ளது. இது தொடர்பாகச் சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை விமான நிலையத்தில் விமான சேவை வழக்கம் போல் உள்ளது.
கடினமான நேரத்தில் உறுதுணையாக இருந்த அரசு மற்றும் விமான நிலையங்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நிலைமையைப் புரிந்து ஒத்துழைப்பு அளித்த அனைத்து பயணிகளுக்கும் நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT