

கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் நடப்பு அரவைப் பருவத்தில் கரும்பு கொள்முதலுக்கான தமிழக அரசின் பரிந்துரை விலையாக டன்னுக்கு ரூ.2850 வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். இது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட விலை ஆகும்.
நடப்பாண்டில் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு மறுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகமாகும்.
2011-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு கரும்பு கொள்முதல் விலை ரூ.2500 ஆக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், கரும்புக் கொள்முதலுக்கு மத்திய அரசு அறிவிக்கும் ஆதாய விலையுடன், தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படும் பரிந்துரை விலையை குறைத்து வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய அரசு அறிவிக்கும் விலையுடன், மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.650 சேர்த்து வழங்கப்பட்டு வந்தது. 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் இது டன்னுக்கு தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.200 குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டில் பரிந்துரை விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அதே பரிந்துரை விலையை இப்போது வழங்கியிருந்தால் கூட, டன்னுக்கு ரூ.2950 கிடைத்திருக்கும். ஆனால், அதைக்கூட செய்ய தமிழக அரசுக்கு மனமில்லை.
உத்தரப் பிரதேச அரசு கரும்புக்கான பரிந்துரை விலையாக டன்னுக்கு ரூ.750 சேர்த்து ரூ.3050 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. பஞ்சாப், ஹரியானாவிலும் கரும்புக்கு அதிக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள டன்னுக்கு ரூ.2850 என்ற விலை போதுமானது அல்ல. இந்திய சந்தையில் சர்க்கரை விலை அதிகரித்திருப்பதாலும், கரும்பு உற்பத்திச் செலவு உயர்ந்திருப்பதாலும் கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அத்துடன் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.1659 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து விவசாயிகளையும், விவசாய சங்கங்களையும் இணைத்து தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். இதற்கான நாள் விரைவில் அறிவிக்கப்படும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.