Published : 27 Jul 2014 02:58 PM
Last Updated : 27 Jul 2014 02:58 PM

சிமென்ட் விலையை கட்டுப்படுத்த தயங்குவது ஏன்?- அரசுக்கு ராமதாஸ் கேள்வி

சிமென்ட் விலையை கட்டுப்படுத்த தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், சிமென்ட் நிறுவனங்களுடன் தமிழக அரசும் கூட்டணி அமைத்திருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது என்று சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் சிமென்ட் விலை கடந்த சில வாரங்களில் மூட்டைக்கு ரூ70 முதல் 80 வரை உயர்ந்துள்ளது. காரணமின்றி செய்யப்பட்டுள்ள விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தில் ஒரு மூட்டை சிமென்டின் விலை ரூ.180 ஆக இருந்தது. ஆனால், அடுத்த 6 மாதங்களில் சிமென்ட் விலை மூட்டைக்கு 100 ரூபாய் அதிகரித்து ரூ.280 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு இறுதியில் 330 ரூபாயாக அதிகரித்த சிமென்டின் விலை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மீண்டும் குறைந்தது.

கடந்த மே மாத இறுதி வரை ஒரு மூட்டை சிமென்டின் விலை ரூ 275 முதல் ரூ.285 என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், ஜூன் மாதத் தொடக்கத்தில் சிமென்ட் விலை ரூ.355 முதல் ரூ.365 என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது. சிமென்ட் விலையை உயர்த்துவதற்கான காரணம் எதுவுமே இல்லாத நிலையில் சிமென்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு விலையை உயர்த்திவிட்டன. வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் சிமென்ட் விலை உயர்த்தப்படாத நிலையில் தென்னிந்தியாவில் மட்டும் விலை உயருவதற்கு சட்டவிரோத கூட்டணி தான் காரணமாகும். இதை நான் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியதுடன் சிமென்ட் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளேன்.

தேவை அதிகரித்து உற்பத்தி குறையும் போது தான் எந்தவொரு பொருளின் விலையும் உயரும் என்பதே இயற்கை நியதி ஆகும். ஆனால், பொருளாதார மந்தநிலை காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு சிமென்ட்டின் தேவை குறைந்து வரும் நிலையில், விலை அதிகரிக்கப்பட்டிருப்பது விடை தெரியாத புதிராக உள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு முன் இந்தியப் பொருளாதாரம் உச்சத்தில் இருந்தபோது சிமென்டின் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிமென்ட் நிறுவனங்கள் பலநூறு கோடி முதலீடு செய்து தங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்ததாகவும், ஆனால், சிமெண்டுக்கான தேவை அதிகரிக்காத நிலையில், ஏற்கனவே செய்யப்பட்ட முதலீட்டை திரும்ப எடுப்பதற்காகத் தான் சிமென்ட் விலையை உயர்த்தியிருப்பதாக ஆலை நிர்வாகங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் விளக்கம் தரப்படுகிறது.

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆலை நிர்வாகங்கள் தவறாக முடிவெடுத்து செய்த முதலீட்டால் ஏற்பட்ட பாதிப்புக்கான தண்டனையை, ஒரு பாவமும் செய்யாத நுகர்வோர்கள் அனுபவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமாகும்?

தமிழக அரசுக்கு சொந்தமான டான்செம் நிறுவனத்தின் தயாரிப்பான அரசு சிமென்ட் மூட்டை ரூ.260 என்ற விலையில் விற்கப்படுகிறது. இந்த விலையிலேயே அரசுக்கு லாபம் கிடைப்பதாக கூறப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் இதைவிட ரூ.100 கூடுதலாக விலை வைத்து விற்பதை அனுமதிக் கூடாது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிமென்ட் விலை மூட்டைக்கு ரூ.315-325 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டதற்கு கட்டுமான நிறுவனங்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சிமென்ட் ஆலை நிர்வாகங்களை அழைத்து தெலுங்கானா அரசு எச்சரிக்கை விடுத்ததால், நேற்று முதல் ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் சிமென்ட் விலை மூட்டை ரூ.290 என்ற அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு கட்டுமானத் தொழில் புத்துயிர் பெறும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் சிமென்ட் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இதுகுறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த தொழில்துறை அமைச்சர் தங்கமணி, சிமென்ட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசியதுடன், இந்த விலை உயர்வால் கட்டுமானச் செலவுகள் பெரிதாக உயர்ந்துவிடாது என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசின் இந்த அணுகுமுறையைப் பார்க்கும்போது சிமென்ட் நிறுவனங்களுடன் தமிழக அரசும் கூட்டணி அமைத்திருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. இந்த அணுகுமுறையை கைவிட்டு, தெலுங்கானா அரசு வழியில் சிமென்ட் ஆலை நிர்வாகிகளுடன் பேசி சிமென்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது அரசாங்க கட்டுமானங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் அரசு சிமென்டின் உற்பத்தியை அதிகரித்து வெளிச்சந்தையில் தாராளமாக கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x