Published : 11 Dec 2022 07:56 AM
Last Updated : 11 Dec 2022 07:56 AM
சென்னை: புயல் தாக்கத்தால் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மேற்கூரை கண்ணாடி உடைந்தது.
‘மேன்டூஸ்’ புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் சென்னையில் மருத்துவமனை வளாகங்களில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மழைநீரும் சில இடங்களில் சூழ்ந்துள்ளன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவின் பின்புறம் ஒரு மரமும், மைதானத்தில் ஒரு மரமும் நேற்று சாய்ந்தன. அவற்றை ஊழியர்கள் உடனடியாக அகற்றினர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நுழைவுவாயில் முன்பு ஒரு மரமும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கு அருகே ஒரு மரமும் முறிந்து விழுந்தன. அவை தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் உடனடியாக அகற்றப்பட்டது.
ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் 6-வது மாடியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி மேற்கூரையில் இருந்த கண்ணாடி ஒன்று உடைந்துவிழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும்பாதிப்பு ஏற்படவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்றுகாலை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அங்கு இருந்த உபகரணங்கள் அனைத்தும் படுக்கை மீது வைக்கப்பட்டுள்ளது. சானடோரியம் அரசு நெஞ்சக மருத்துவமனை வாயிலில் வெள்ளம் சூழ்ந்ததால் மருத்துவமனைக்கு வந்தவர்கள் அவதிப்பட்டனர். வெள்ள நீரை மருத்துவமனை நிர்வாகம் மோட்டார் வைத்து வெளியேற்றியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT