Published : 31 Dec 2016 06:46 PM
Last Updated : 31 Dec 2016 06:46 PM

பிரம்மாண்டமான புத்தாண்டுக் கொண்டாட்டம் தயார்... புத்தகங்களோடு வாழ்த்துச் சொல்ல நீங்கள் தயாரா?

பிரம்மாண்டமான புத்தாண்டுக் கொண்டாட்டம் தயார்…

புத்தகங்களோடு வாழ்த்துச் சொல்ல நீங்கள் தயாரா?

டிச.31, ஜன.1 இரு நாட்களும் 50% வரை தள்ளுபடி!

இன்று நள்ளிரவிலும் புத்தகக் கடைகள் திறந்திருக்கும்... விடிய விடிய நிகழ்ச்சிகள்

புத்தாண்டு நாளைப் புத்தகங்களுடன் கொண்டாடும் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில், ‘தி இந்து’ முன்னெடுக்கும் ‘புத்தகங்களுடன் புத்தாண்டு இயக்கம்!’ மேலும் பெரும்கொண்டாட்டமாகிறது. சில பதிப்பகங்கள் 50% வரை தள்ளுபடியை அறிவித்திருக்கின்றன.

புத்தாண்டு அன்று வாசகர்கள் வெளியில் சந்திக்கும் முதல் நபருக்கும், ஏனைய நண்பர்களுக்கும் புத்தகங்களைப் பரிசளித்துப் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டும். இந்த யோசனையை ‘தி இந்து’ முன்மொழிந்ததும் ‘தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்’ (பபாசி) ஆர்வத்தோடு தன்னையும் இதில் இணைத்துக்கொண்டது.

இதன்படி, ‘பபாசி’யில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் புத்தகக் கடைகள் டிசம்பர் 31 அன்று நள்ளிரவில் திறந்திருக்கும். முக்கியமான நகரங்களில் முழு இரவும் கடைகள் திறந்திருப்பதோடு எழுத்தாளர்களுடனான வாசகர்கள் சந்திப்புகள், இலக்கியக் கச்சேரிகள், விவாதங்கள் என்று விடிய விடிய நிகழ்ச்சிகளும் நடக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாட்களும் தமிழகம் எங்கும் உள்ள ‘பபாசி’யின் உறுப்பினர்களின் புத்தகக் கடைகளில் 10% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்படும்.

இந்த இயக்கத்தை மேலும் உற்சாகமாக வளர்த்தெடுக்கும் நோக்கில் பல பதிப்பகங்கள் கூடுதல் தள்ளுபடிச் சலுகைகளை அறிவித்துள்ளன. ‘சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்’ (தொடர்புக்கு: 92834 52503), ‘கண்ணதாசன் பதிப்பகம்’ (தொடர்புக்கு: 044 24338712), ‘எமரால்டு பதிப்பகம்’ (தொடர்புக்கு: 98404 60015) மூன்றும் 15% தள்ளுபடியை அறிவித்துள்ளன.

‘காலச்சுவடு’ (தொடர்புக்கு: 96777 78862), ‘உயிர்மை’ (தொடர்புக்கு: 90032 18208) இரண்டும் 25% தள்ளுபடியை அறிவித்துள்ளன.

‘பாரதி புத்தகாலயம்’ (தொடர்புக்கு: 94449 60935), ‘நியு செஞ்சுரி புக் ஹவுஸ்’ (தொடர்புக்கு: 94433 70015) இரண்டும் 50% தள்ளுபடியை அறிவித்துள்ளன.

பொள்ளாச்சியிலுள்ள எதிர் வெளியீடு (தொடர்புக்கு: 98650 05084) 30% வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்தப் பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்களை இவர்களிடம் நேரடியாக வாங்குவோருக்கு இந்தக் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

புத்தாண்டு இரவைக் கொண்டாடும் வகையில், எழுத்தாளர்கள் - வாசகர்கள் இணைந்து பங்கேற்கும் ‘விடிய விடிய கொண்டாட்ட நிகழ்ச்சி’களுக்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், வேல.ராமமூர்த்தி, கொ.மா.கோ.இளங்கோ, லக்ஷ்மி சரவணகுமார், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

உயிர்மை பதிப்பகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பாரதி புத்தகாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சா.கந்தசாமி, பாரதி கிருஷ்ணகுமார், திருமாவேலன், ச.தமிழ்ச்செல்வன், சமஸ், இரா.நடராஜன், யூமா வாசுகி, கமலாலயன், இரா.தெ.முத்து, அ.குமரேசன், விழியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பரிசல் புத்தக நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கி.பி. சச்சிதானந்தன், சந்துரு, டிராட்ஸ்கி மருது, அரவிந்தன், பா. ரஞ்சித், ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

வந்துவிட்டது 2017. ‘புத்தகம் வாங்குவோம் புத்தாண்டைக் கொண்டாடுவோம்’ என்ற முழக்கத்துடன் இந்தப் புத்தாண்டை மட்டுமல்ல; இனிவரும் எல்லாப் புத்தாண்டுகளையும் கொண்டாடுவோம்! வளமான ஒரு புத்தகக் கலாச்சாரத்துக்கு வித்திடுவோம்! நல்ல புத்தகம் ஒரு நல்லாசிரியர்! புத்தகப் பரிசுடன் புத்தாண்டு வாழ்த்து சொல்வோம்!

இந்த ஆண்டில் உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் எவை?

சமூக வலைதளங்களில் பகிருங்கள்!

2016-ல் நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்தமான புத்தகங்கள் என்னென்ன? அவற்றை எழுதிய ஆசிரியர்கள், விலை, பதிப்பகம், பிடிக்கக் காரணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஃபேஸ்புக், வாட்ஸப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நண்பர்களுக்குப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களின்

பட்டியலையும் கேளுங்கள். குறைந்தது மூன்று புத்தகங்கள். புத்தககங்களைப் பற்றிப் பேசுவதையும் விவாதிப்பதையும் ஒரு விளையாட்டாக முன்னெடுப்போம்;

கலாச்சாரமாக மாற்றுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x