அதிமுக கட்சி, சின்னத்துக்கு உரிமை கோரக் கூடாது என ஓபிஎஸ்ஸுக்கு தடை விதிக்க இபிஎஸ் மனு

அதிமுக கட்சி, சின்னத்துக்கு உரிமை கோரக் கூடாது என ஓபிஎஸ்ஸுக்கு தடை விதிக்க இபிஎஸ் மனு
Updated on
1 min read

புதுடெல்லி: அதிமுக கட்சி மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரக்கூடாது என ஓபிஎஸ்ஸுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான அம்மன் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் இறுதி முடிவு எட்டப்படும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என வைரமுத்து தரப்பில் கோரப்பட்டது. கட்சியின் செயல்பாடுகள் தொய்வின்றி நடைபெற இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் என பழனிசாமி தரப்பில் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக இடைக்கால மனு தாக்கல் செய்ய பழனிசாமி தரப்புக்கு அனுமதி அளித்தது.

அதன்படி, இந்த வழக்கில் பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:உள்ளாட்சி தேர்தல் தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலியிடங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, அப்போது அதிமுகவின் கட்சிப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது; அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுகக் கூடாது என ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், அதை காரணம் காட்டி கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட மாற்றத்தை தேர்தல் ஆணையம் இன்னும் பதிவேற்றம் செய்யாமல் உள்ளது. இதனால் கட்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 12-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in