மாண்டஸ் புயல் தாக்கம்: தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்த தினசரி மின்சார பயன்பாடு

மாண்டஸ் புயல் தாக்கம்: தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்த தினசரி மின்சார பயன்பாடு
Updated on
1 min read

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் தினசரி மின்சார தேவை மிகவும் குறைந்தது.

தமிழகத்தின் தினசரி மின்சார தேவை 14 ஆயிரம் மெகா வாட் ஆக உள்ளது. கோடை காலத்தில் இந்த அளவு 17 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு அதிகரிக்கும். இந்நிலையில், தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று (டிச.9) பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் குளிர்ந்த வானிலை நிலவியது.

குளிர்ந்த வானிலை காரணமாக தமிழகத்தின் மின்சார தேவை மிகவும் குறைந்தது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால், தமிழகத்தில் நேற்று 6300 மெகா வாட் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6490 மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

இதைப்போன்று சென்னையிலும் மிகவும் குறைவான மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் நேற்று (டிச.9) இரவு 9 மணிக்கு 2200 மெகா வாட்டாக இருந்த மின்சார பயன்பாடு நள்ளிரவுக்குப் பின் 1 மணிக்கு 753 மெகா வாட்டாக குறைந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in