

சென்னை: "மாண்டஸ் புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. அவற்றின் கூண்டுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மரங்கள், சுற்றுச்சுவர் விழுந்ததைத் தவிர பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை" என்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
மாண்டஸ் புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20-க்கு மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. உயிரியல் பூங்காவின் மதில் சுவர் இடிந்து விழுந்தது கடுமையாக சேதமடைந்தன. பூங்காவில் சரிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட பாதிப்புகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாண்டஸ் புயலால் மரங்கள் விழுந்து மதில் சுவர் பாதிக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக வந்து ஆய்வு மேற்கொண்டேன்.
பூங்காவில் உள்ள 7 பெரிய மரங்களும், சிறிய மரங்கள் பலவும் முறிந்து விழுந்துள்ளன. பூங்காவின் அலுவலகத்தின் உள்ளே இருக்கும் சுற்றுச்சுவரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். இன்று மாலைக்குள் முறிந்து விழுந்துள்ள மரங்கள் அப்புறப்படுத்தப்படும் என்று பூங்கா இயக்குநர் கூறியுள்ளார்.
நேற்று வீசிய மாண்டஸ் புயல் காரணமாக பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. அவற்றின் கூண்டுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மரங்கள், சுற்றுச்சுவர் விழுந்ததைத் தவிர பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.