மாண்டஸ் புயல் பாதிப்பு | ஈஞ்சம்பாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மாண்டஸ் புயல் பாதிப்பு | ஈஞ்சம்பாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
Updated on
1 min read

சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், ஒட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு புயல் நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, மாநகராட்சி, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

முன்னதாக, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் இன்று மதியம் இது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஞ்சம்பாக்கத்தை தொடர்ந்து சென்னை காசிமேட்டிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், "மாண்டஸ் புயலால் தீவிர பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. சேத விவரங்களை அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். காசிமேடு துறைமுகத்தில் படகுகள் சேதம் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். தேவைப்பட்டால் பாதிப்புக்கு ஏற்ப மத்திய அரசிடம் உதவி கோரப்படும்" என்றார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் மழை பாதிப்பு, சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்வார் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in