Published : 09 Dec 2022 07:50 PM
Last Updated : 09 Dec 2022 07:50 PM

மாண்டஸ் புயல் | மக்களைக் காக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "எந்த அளவுக்கு மழை வந்தாலும், காற்று வீசினாலும் அவற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஏற்கெனவே சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவர்கள், தலைமைச் செயலாளரோடு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கண்காணிப்பு அலுவலர் ஐஏஎஸ் அதிகாரிகள் அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை கவனித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளனர்.

எனவே, எந்தளவுக்கு மழை வந்தாலும், காற்று வீசினாலும் அவற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சில முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சில முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்படவில்லை. இருப்பினும் மக்களுக்கு உரிய முறையில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மக்களும் அதற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x