கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் பள்ளி, அலுவலக நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை கோரி வழக்கு

Published on

சென்னை: சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி செல்லும் மாணவ - மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும்.

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை சாலைகளில் நிறுத்தி குப்பைகளை எடுப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சேகரித்துச் செல்லும் குப்பைகள் மீது வலையைப் போர்த்தி செல்லாததால் காற்றில் அவை பறந்து சாலைகளில் கொட்டுகிறது. இந்தக் குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதோடு, சுகாதார கேடும் ஏற்படுகிறது.

வெளிநாடுகளைப் போல, சென்னையிலும் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்கினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. எனவே, சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in