

சென்னை: மாண்டஸ் புயலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனைத்து துறை அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல்: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் "மாண்டஸ்" புயல் சின்னம் காரணமாக - கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு அலுவலர்கள் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனைத்து துறை அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று (டிச.8) 36 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 4.15 மி.மீ. ஆகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 26.66 மி.மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.05 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள்: நாகப்பட்டினம் 26.66 (மி.மீ.), ராமநாதபுரம் 15.49 (மி.மீ.), செங்கல்பட்டு 14.71 (மி.மீ.), சென்னை 13.75 (மி.மீ.), திருவள்ளூர் 13.20 (மி.மீ.), காஞ்சிபுரம் 13.10 (மி.மீ.), திருவாரூர் 10.61 (மி.மீ.), மயிலாடுதுறை 10.22 (மி.மீ.) மழையும் பதிவாகியுள்ளது.
நேற்று (டிச.8) தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த "மாண்டஸ்" புயலானது மேலும் வலுவடைந்து கடும் புயலாக தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இது வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என்றும், மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்று ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கன, மிக கனமழை மற்றும் அதி கனமழைப் பொழிவு ஏற்படும் பகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 09-12-2022 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10-12-2022 திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடல், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் அலைச் சீற்றம் குறித்த எச்சரிக்கை:
தரைக்காற்று குறித்த எச்சரிக்கை:
09-12-2022 அன்று புயல் கரையைக் கடக்கும்போது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில் கனமழையை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்: