

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7-ம் தேதி இரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. பின்னர் தீவிரப் புயலாக உருவெடுத்தது. இது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் புயலாக வலுவிழந்து கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையில் நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று இரவு பெய்யத் தொடங்கியபின் விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விடாது மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதன்படி நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சென்னையில் தண்டையார் பேட்டை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், நந்தனம் ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. பெரம்பூர், டிஜிபி அலுவலகம், புழல் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ, எம்ஜிஆர் நகர், அயனாவரம், தரமணி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.