

‘மேன்மை’ வெளியீடு முதலாம் ஆண்டு நிறைவு விழா, மூன்று நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். ‘வல்லிகண்ணன் தி.க.சி-க்கு எழுதிய கடிதங்கள்’ என்ற கழனியூரன் நூலை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். அதன் முதல் பிரதியை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா பெற்றுக்கொண்டார்.
மேன்மையின் ஆசிரியர் கே.ஜீவபாரதி தொகுத்த நல்லகண்ணுவின் ‘எளிமையின் ஏந்தல்’ எனும் கட்டுரை நூலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
கே.ஜீவபாரதியின் ‘மேன்மை களஞ்சியம்’ நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக ’மேன்மை’ பதிப்பாளர் மு.மணி வரவேற்புரை நிகழ்த்த, நூல் ஆசிரியர்கள் கழனியூரன், கவிஞர் கே.ஜீவபாரதி ஆகியோர் ஏற்புரையாற்றினர். நிறைவில் வழக்கறிஞர் ஆ.தமிழ்மணி நன்றி கூறினார்.
மக்கள் நலக் கூட்டணி உடைந்த பிறகு அந்த கூட்டணியில் இடம்பெற்ற தலைவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. வைகோ பேசி முடித்ததும், மேடையில் இருந்தவர்களிடம் வெளியூர் செல்வதாக கூறி உடனே புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் வைகோ, மதிமுக தொண்டர்களிடம் இது முக்கியமான விழா என்பதால் கடைசி வரை இருந்து விட்டுச் செல்லுங்கள் என கட்டளையிட்டுச் சென்றார்.