கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான மேலும் 3 பேருக்கு டிச.22 வரை நீதிமன்ற காவல்: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான மேலும் 3 பேருக்கு டிச.22 வரை நீதிமன்ற காவல்: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 பேர் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின் (28) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்தனர். இதில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், தொடர் சோதனையின்போது வெடி பொருட்கள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (26) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மற்றும் சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை போத்தனூரைச் சேர்ந்த முகமது தவ்பிக் (25), நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த உமர் பாரூக் (39), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ்கான் (28) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

விசாரணையில் குன்னூரில் உள்ள உமர் பாரூக் வீட்டில் ஜமேசா முபின் ரகசியக் கூட்டம் நடத்தியதும், அதில் தவ்பிக், பெரோஸ்கான் கலந்து கொண்டதும், மூவரும் ஜமேசா முபினின் பயங்கரவாத செயலுக்கு உதவியதும் தெரிய வந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேரையும் வரும் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in