

அரியலூர்/திருச்சி: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே போலீஸார் தாக்கியதால் காயமடைந்ததாகக் கூறப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, அந்தக் கிராமத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அணைக்குடி காலனி தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர், கடந்த நவ.24-ம்தேதி அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு உறவினர்களுடன் சீர்வரிசை எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது, காசாங்கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்துச் செல்ல மற்றொரு சமூகத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புருஷோத்தமன் அளித்த புகாரின்பேரில், அருண்குமார் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், அருண்குமாரை தேடி, அதே கிராமத்தில் உள்ள அவரது மாமனாரான விவசாயி ஜம்புலிங்கம் (60) வீட்டுக்கு போலீஸார் சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஜம்புலிங்கம் குடும்பத்தினரை போலீஸார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜம்புலிங்கம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது, போலீஸார் தன்னை தாக்கியதால்தான் காயமடைந்ததாக அரியலூர் போலீஸாரிடம் ஜம்புலிங்கம் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜம்புலிங்கம், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
பாமகவினர் போராட்டம்: இதையடுத்து, ஜம்புலிங்கத்தைத் தாக்கிய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனியார் மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல, ஜம்புலிங்கத்தைத் தாக்கிய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ரவிசங்கர் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக காசாங்கோட்டை கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரமங்கலம் போலீஸார் சந்தேக மரணம் (பிரிவு 174) என வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அன்புமணி அறிக்கை: இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டஅறிக்கை: ஜம்புலிங்கத்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களில், காவல்துறையினர் தாக்கியதுதான் அவரது காயங்களுக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மரணத்துக்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். ஜம்புலிங்கம் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.