

மேட்டுப்பாளையம்: கோவைமாவட்டம் காரமடையில் உள்ள அரங்கநாதர் கோயிலில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில்அர்ச்சனை செய்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழிபட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வுப் பணிக்காக வந்தார். அங்கு ஆய்வுப் பணியை முடித்துவிட்டு, மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அன்றைய தினம் மாலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு அமைச்சர் வந்தார்.
மேட்டுப்பாளையம் - காரமடை வழித்தடத்தில் உள்ள குட்டையூரில் மாதேஸ்வரன் கோயில் உள்ளது. கார்த்திகை தீபத்தையொட்டி கடந்த 6-ம் தேதி அங்கு தீபம் ஏற்றப்பட்டது. கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் தீபத்தை தரிசனம் செய்தார். பின்னர், அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் கோயிலுக்குச் சென்றார். கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு அரங்கநாத சுவாமியை வழிபட்ட அமைச்சர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரையும், அடுத்து தனது பெயரையும் கூறி அர்ச்சனை செய்யும்படி, அர்ச்சகரைக் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, அங்கிருந்த அர்ச்சகரும் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயருக்கும், அமைச்சர் மஸ்தான் பெயருக்கும் அர்ச்சனை செய்தார். பின்னர், கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு பிரசாதங்களை வழங்கினர். அதைப் பெற்றுக் கொண்டு அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் இதுதொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தான் இந்த வழிபாட்டில் ஈடுபட்டேன்,’’ என்றார்.