

சென்னை: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக தமிழகத்தில் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் புதுமை மையம் அமைக்கப்பட உள்ளது என தமிழகமாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறையின் சார்பில்தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று நடந்தது. தமிழக சுற்றுச்சூழல் துறை கூடுதல்செயலர் சுப்ரியா சாஹூ மாநாட்டுக்கு முன்னிலை வகித்தார்.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி, தமிழக பசுமை இயக்கம் மற்றும் ஈரநிலம் இயக்கத்தின் திட்ட இயக்குநர் தீபக் வஸ்தவா, தமிழக காலநிலை மாற்றம் திட்ட இயக்குநர் தீபக் பில்கி உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாடு குறித்து செய்தியாளர்களிடம், சுற்றுச்சூழல் துறை கூடுதல் செயலர் சுப்ரியா சாஹூகூறும்போது, ‘‘இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் காலநிலை மாற்றம் மாநாடு நடக்கிறது.காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை குறைப்பது எப்படி,எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்துஇந்த மாநாட்டில் விவாதிக்க இருக்கிறோம்.
தமிழகத்தில் ஏற்கெனவே 13ராம்சர் சதுப்பு நிலங்கள் உள்ளன.இதை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் பறவைகளை பாதுகாக்க முடியும். காலநிலை மாற்றத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதால், அவர்கள் எந்த மாதிரியான பயிர்களை பயிரிட வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தி வருகிறோம்.
பசுமை இயக்கத்தின் முதல் ஆண்டுக்கான இலக்காக 2.8 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டு, அந்தபணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன’’ என்றார்.
மாநாட்டில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி பேசியதாவது: மஞ்சப்பையின் பயன்பாட்டை ஊக்குவிக்கதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 3 பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் மூலமாக ’மஞ்சப்பை விருதுகள்’ வழங்கப்பட உள்ளன. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதை விளக்கும் வகையில், ‘மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்’ வரும் ஜனவரியில் இயக்கப்படும்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ரயில் 2 முதல் 3 நாட்களுக்கு நின்று செல்லும். மேலும், பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருப்பது எவ்வாறு என்பது குறித்து கோயம்பேடு மார்க்கெட்டில், சென்னை ஐஐடி உதவியுடன் ஒரு புதுமை மையம் அமைக்கப்பட உள்ளது. மஞ்சப்பைக்கு எனமொபைல் செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது என்றார்.