

மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை முன்பு இருந்ததைப் போல, காலை 10 மணிக்கு நடத்தி மதியம் 12.45 மணிக்கு முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எஸ்எஸ்எல்சி தேர்வு வழக்கமாகக் தொடங்கும் நேரம் காலை 10 மணிக்குப் பதிலாக காலை 9.15 மணிக்கு தொடங்கும் என்றும் மதியம் 12.45 மணிக்குப் பதிலாக பகல் 12 மணிக்கே முடியும் என்ற புதிய நடைமுறை கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் காலை 7 மணிக்கே புறப்பட்டு தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் காலை உணவை சாப்பிடாமல் தேர்வெழுதும் நிலை ஏற்படுகிறது. பழைய முறைப்படி தேர்வினை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோரும் அரசுக்கு எவ்வளவோ கோரிக்கைகள் வைத்த பின்னரும் தேர்வு தொடங்கும் நேரத்தை மாற்ற அரசு மறுத்துவிட்டது.
தற்போது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலிருந்தாவது மாணவர்கள் நலன் கருதி முன்பு இருந்துவந்ததைப் போல காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
மேலும், 10-ம் வகுப்பு முதல் தாள் தேர்வு மற்றும் 2-ம் தாள் தேர்வுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து தேர்வு நடத்தப்பட உள்ளது. முதல் தாள் முடிந்து 2-ம் தாள் தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி தமிழ் முதல் மற்றும் 2-ம் தாளுக்கு இடையே ஒருநாள் மட்டுமாவது இடைவெளி அளித்து திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.