Published : 08 Dec 2022 03:09 PM
Last Updated : 08 Dec 2022 03:09 PM

50 கேள்விகளுடன் அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில்களில் அர்ச்சகர் நியமன விதிகளை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சர்களை நியமிக்க வேண்டும். எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இக்குழுவில், குழு தலைவர் ஒப்புதலுடன் இரு உறுப்பினர்களை அரசு நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் தயாரித்த 50 கேள்விகளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை ஆணையர் நவம்பர் 4-ம் தேதியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அந்த மனுவில், "கோயில்களின் ஆகமத்தை கண்டறிய உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அதிகாரத்தை பறித்துக் கொள்ளும் வகையில், சம்பந்தமில்லாத கேள்விகளுடன் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரு பிரதிநிதிகளை நியமிக்காத அரசு, அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு செயல்.

ஆகமங்கள் பற்றி எதுவும் தெரியாத சத்தியவேல் முருகன், நடைமுறையில் இல்லாத தமிழ் ஆகமம் பற்றி தவறான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஆகமங்களை அறியாத அவர் தயாரித்த கேள்விகளுடன் கூடிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். மேலும் அவரை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவில் உறுப்பினராக நியமிக்க தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், "உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நபரை நியமிக்கக் கூடாது என முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 4-ம் தேதி வேறு பயன்பாட்டுக்காக சுற்றறிக்கை அனுப்பப்பட்டது" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மனுதாரர் குறிப்பிட்டுள்ள அந்த சுற்றறிக்கை ஆகம விவரங்களை கோரும் வகையில் உள்ளதாக கூறி, ஆகமங்களை கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகள் எழுப்பி அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x