Published : 08 Dec 2022 01:47 PM
Last Updated : 08 Dec 2022 01:47 PM

தென்காசி அரசு விழா: 1,03,508 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (8.12.2022) தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

முதல்வராக பதவியேற்றப் பிறகு முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு (7.12.2022) சென்னையிலிருந்து தென்காசிக்கு ரயில் மூலம் பயணம் மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (8.12.2022) காலை சென்றடைந்த முதல்வருக்கு தென்காசி ரயில் நிலையத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெரியோர்கள், தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று காலை தென்காசி ரயில் நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் முதல்வர், அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.இன்றைய தினம் தென்காசியில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் முதல்வர் இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் விவரங்கள்:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், 4 கோடியே 25 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் மருதம்புத்தூர், வேலாயுதபுரம், இலத்தூர், விஸ்வநாதபேரி, குத்துக்கல் வலசை ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், வலங்கைப்பலிசமுத்திரம், கரைகண்டார்குளம், களப்பாகுளம், அரியநாயகிபுரம், வீரிருப்பு, மைலப்பபுரம், ஐந்தான்கட்டளை, தேவிப்பட்டிணம், கூடலூர், சங்கனாப்பேரி, ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள். தென்காசி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள உணவுதானியக் கிடங்கு, ஆலங்குளம் ஒன்றியம், ஓடைமறிச்சான் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி, கோ-மருதப்பபுரம் மற்றும் குலசேகரமங்கலம் ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடம், குருவிகுளம் ஒன்றியம், பழங்கோட்டை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கக் கட்டடம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், நெற்கட்டும்செவல் ஊராட்சி, பச்சேரியில் கட்டப்பட்டுள்ள 45 பசுமை வீடுகள், கடையநல்லூர் ஒன்றியம், நெடுவயல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், முள்ளிகுளம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, செங்கோட்டை ஒன்றியம் சீவநல்லூர், திருவெற்றியூரில் பயணிகள் நிழற்குடை;

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செங்கோட்டையில் 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்பரிசோதனைக்கூடம்; வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஊத்துமலை, வீரகேரளம்புதூர், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வல்லத்தில் 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய புற நோயாளிகள் பகுதி, கம்பனேரி மற்றும் மடத்துப்பட்டி பகுதிகளில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள், ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்பு; பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் செவல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான கழிப்பறைகள்;

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தென்காசி நகராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா மற்றும் மங்கம்மாள் சாலை பகுதியில் சுகாதார நல மையம், சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் 3 கோடியே 16 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கசடு கழிவு மேலாண்மை மையம், கடையநல்லுார் நகராட்சியில் 1 கோடியே 16 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் குமந்தாபுரம் மற்றும் மேலக்கடையநல்லூர் பகுதிகளில் நகர்புற நல மையம், அண்ணாமலை பொய்கை மேம்படுத்தும் பணி, திருமால் விழுங்கி ஊரணி மேம்படுத்தும் பணிகள்;

பொதுப்பணித் துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு) சார்பில் அ.கரிசல்குளம், பழங்கோட்டை, மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய கிராமங்களில் 63 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகள், தலைவன்கோட்டை, சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 52 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சித்த மருத்துவ பிரிவுகள், சங்கரன்கோவில் நடுவக்குறிச்சியில் 3 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி;

வனத்துறை சார்பில் புளியங்குடி தலையணை வனப்பகுதியில் வனத்தீ ஏற்படாமல் தடுக்க 3 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை;மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடையநல்லூர் நகராட்சியில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை அங்காடி;சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் மத்தளம்பாறை, ஐந்தாம் கட்டளை மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய கிராமங்களில் 32 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையக் கட்டடங்கள்;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தாட்கோ சார்பில் காரிசாத்தன், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் 2 கோடியே 1 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் அரசு ஆதிதிராவிடர் நல நவீன சமுதாயக்கூடங்கள்;என மொத்தம் 22 கோடியே 20 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 57 முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.மேலும், இவ்விழாவில் தமிழக முதல்வர் மொத்தம் 34 கோடியே 14 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 1,03,508 பயனாளிகளுக்கு 182 கோடியே 56 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் வழங்கினார்.

முன்னதாக, தமிழக முதல்வர் தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, அப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் .பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.தனுஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார், ஈ.ராஜா, டாக்டர் தி. சதன் திருமலைக்குமார், எம். அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x